Monday, September 12, 2011

மலர்களின் மரணம்

டொன் டொன் டொன்....எப்படா மழை பெய்யும்னு காத்துக்கிடக்கற விவசாயிக்கு விடாம மழை பெய்தால் எப்படியிருக்குமோ அதை விட அதிக பூரிப்புடன் அந்த மணிச்சத்தம் காதில் இன்பமாக ஒலிக்க ஹைய்யா என மனதிற்குள் குதூகலித்தபடி பையைத் தோளில் போட்டுக்கொண்டு ஓடினாள் கனிமொழி...வேனில் ஏறி தன் தோழியின் அருகில் அமர்ந்தவளின் மனம் முழுதும் " நாளைக்கு ஞாயிற்றுக்கிழமை.." என்பது மட்டுமே நினைவிலோடியது.வேன் வீட்டருகிலிருக்கும் ரோட்டிற்கு அருகில் நிறுத்த, வழியிலிருந்த செடிகளைத் தன் கையிலிருந்த பையால் தடவியவாறே,அதில் ஒட்டியிருந்த பட்டாம்பூச்சிகளைவிரட்டியபடி,"அம்மா எனக்கு லீவு" என கத்தியபடி வீட்டிற்குள் ஓடினாள்.இரவு முழுதும் தூக்கமே வரல, நாளைக்கு என்னென்ன விளையாடலாம் என்றே மனம் கணக்கு போட்டுக் கொண்டிருந்தது.விடிந்தது தான் தாமதம், கனிமொழியை ஆளையே காணோம்.. ஏலா,கனி ஞாயித்துகிழமையானாலேஉங்கூட இதே ரோதன தானா,காலையிலிருந்து சாப்புடாமக்கூட அப்டி என்னதாம்டி விளையாடரே என்ற ஏலம்மாவின் குரலுக்கு செவி சாய்க்கும்நிலையில்,கனி இல்லை... ஆலமரத்தடியில் ஆரம்பித்த அவளின் விளையாட்டு,கண்ணாமூச்சி,கல்லா மண்ணா,பல்லாங்குழி,கிச்சு கிச்சு தாம்பாலம் என நீண்டதே தவிர குறையவில்லை.இரண்டொருமுறை வந்து பார்த்த ஏலம்மாவும்,ஒருநா தானே விளையாடிட்டு போகுது என திரும்பிவிட்டாள்.
இருட்டிக்கொண்டு வந்தது,அனைவரும் வீடு திரும்பினர்,கனி மட்டும் யாருமற்ற ஆலமரத்தையே வெறித்து பார்த்தாள். பின் வீட்டிற்கு வந்து,சாப்பிட்டு முடித்த கையோடு,காலண்டரை எடுத்தாள், எதோ மனதிற்க்குள்கணக்கு போட்டபடி, அம்மா மறுபடியும் ஞாயிற்றுக்கிழமை வர இன்னும் ஏழு நாளாகுமா? என ஏக்கத்துடன் கேட்டாள்.ஆமாம் கன்னு இப்ப தூங்கு,நாளைக்கு காத்தால எந்திருச்சு கிளம்பனும்..விடிந்தது.எழுந்தவுடன் குளித்து,பையில் டிபனை எடுத்துவைத்து,கிளம்பி ரோட்டிற்க்குச் சென்றுவேனிற்காக நின்றிருந்தாள்.எதிரே பள்ளிப் பையோடு சென்று கொண்டிருந்த,அம்முவிடம் கையைக் காட்டி, "அடுத்த ஞாயித்துக்கிழமை விளையாடலாம்...எனக் கை காட்டினாள்.தூரத்தே வேன் வந்து கொண்டிருந்தது "பரமேஸ்வரா ஃபயர் வொர்க்ஸ்" என்ற பெயரைத் தாங்கியபடி,சாப்பாட்டுபை தாங்கியிருந்த
தீப்பெட்டிக் கருப்பேறிய கைகளைக் காட்டி வேனை நிறுத்தினாள் "கனிமொழி என்னும் குழந்தைத் தொழிலாளி"...