ஒரு பாலைவனம் பனித்துளியாகியது
"பீபீபீப்ப்ப் ஒத்தை ஆலமரம் ஸ்டாப்லாம் இறங்குங்கப்பா" என்ற கண்டக்டரின் குரல் கவனத்தைக் கலைக்க பிரகாஷ் கண்விழித்தான்.கண்ணைக் கசக்கி,முகம் துடைத்து நிமிர்ந்த போது பஸ் கல்லம்பட்டி விலக்கினைத் தாண்டியிருந்தது.பத்து வருடங்களுக்கு முன் கிராமத்தை விட்டுச் சென்று மெரீட்டில் பொறியியல் படித்து கம்ப்யூட்டர்,டேடாபேஸ்,ப்ரொஜெக்ட்,கார்ப்பொரேட் மீட்டிங் என அலுவல்களில் மூழ்கி,கனத்த பேங்க் பேலன்ஸுடன் கார்,பங்களா சீருடன் மனைவி அமையப்பெற்று,ஓய்வுநேரத்தில் ட்விட்டர்,பிளாக்கர் என கண்டதைக் கிறுக்கி வாழும் இருபத்தொன்றாம் நூற்றாண்டின் யுவனான ப்ரகாஷிற்கு கிராமபயணம் புதியதாய் இல்லையென்றாலும் உடன் வந்த அமெரிக்க யுவன் அமருக்கு ஒவ்வொரு விசயமும் புதியதாக தோன்ற ஒவ்வொன்றாக கேட்டுக்கொண்டே வந்தான்."கார்-ல போங்கனு சொன்னா கேக்க மாட்டேங்கறீங்க,பாத்து போய்ட்டு வாங்கையா" என்ற அம்மாவின் குரல் பிரகாஷின் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருந்த்து..உலகெங்கும் பறந்து நவீனயுகத்தின் நொடிக்கொரு மாற்றங்களை கண்டுகளித்த பிரகாஷிற்கு சொந்தக்கிராமத்தின் வழித்தடங்கள் இன்னும் மாறாதது அதிர்ச்சியே
தந்தது.
பஸ் இப்போது கண்மாயை நெருங்கிவிட்டிருந்தது.ஊரின் அடையாளமே மலையடிவாரத்தில் கடலென விரிந்துள்ள இக்கண்மாயும்,மலையோரமுள்ள மரங்களாய் வேரூன்றியுள்ள ஆலமரவிழுதுகளும் தான்.. நினைவுகள் பின்னோக்கின, நினைவின் கிளைகளில் டவுசர்,புல்லட்,சங்கிலி,கருப்பு,தவுடா என்ற பெயர்களுடன் "மில்லி தாத்தா"-வும் நினைவிலாடினார்.
"டேய் கருப்பு தவுடனை பாருடா கிளைல எம்மா ஒயரத்துல இருந்து குதிக்கறானு" என்று புல்லட் முடிக்கும் முன் "இது என்னடா இப்ப பாரு" என சங்கிலி படபடவென மரத்திலேறி உச்சியிலிருந்து மூன்றாக வளைந்து குதித்தான்.
"பிரகாஷ் கம்மா ரெம்ப ஆழம்பா,கரையிலேயே உக்காந்து குளிச்சுட்டு வந்துருயா, அம்பி,நந்து கூட சேர்ந்து பத்திரமா வந்துடுபா"என்ற அம்மாவின் குரல் காதில் ஒலித்துக்கொண்டே இருப்பதால் பிரகாஷ் ஆசையிருந்தும் மற்றவருடன் சேராமல் கரையருகிலேயே குளிப்பான்.
அனைவரும் ஹேய்ய்ய்ய் என கத்த புல்லட் "டேய் மில்லி தாத்தா வந்துட்டாருடா.. " என அடியிலிருந்து கத்தினான்...கரையருகில் உக்கார்ந்திருந்த பிரகாஷ் திரும்பி பார்க்க,எல்லாக் குழந்தைகளும் அவரை நோக்கி ஓடின.
மில்லி தாத்தா.. மிலிட்டரியிலிருந்து வந்ததாலோ,மில்லில் வேலை பார்த்ததாலோ என்னவோ மில்லி தாத்தா என்ற பெயர் வந்தது போல என சொல்லுவார்கள். நெடுநெடுவென்ற உயரம்,செட்டியார் தோப்பு பெரிய மாமரத்து காய்களையே நின்று கொண்டே பறித்து விடுவார். அடர்சுருள் முடியில் இரு முடிகளை வளைத்து முன்னால் காற்றில் பறக்கவிட்டிருப்பார். பத்து பேர் கூடி நின்று அடித்தாலும் தாங்கும் வலுவுள்ள உடல்வாகு,காடு போன்ற புருவத்தின் இடையில் எப்போதும் மிளிரும் செந்தூரம்,மூக்கு மட்டும் சப்பையாக,புகையிலை காவிப்பற்கள், இடது கையில் மிளிரும் வெண்கலக் காப்பு,கழுத்தில் இருதாயத்துக்களுடன் கனத்த கருப்புக் கயிறு,இறுகிய முகம்,கணுக்காலில் முடிகயிறு என அவரின் தோற்றமே அவரின் மேல் ஒரு வித பயத்தை ஏற்படுத்தும் பிரகாஷிற்கு.. "டேய் நம்ம ஊருலயே பெரிய ஆளு யாரு தெரியுமாடா நம்ம மில்லிதாத்தா தாம்டா" என டம்ளர் வாய் ஓயாது சொல்லுவான்
ஆனாலும் அவர் குழந்தைகள் மேல் காட்டும் பிரியம் அலாதியானது.அவரின் அன்றாட வேலைகளில் தவறாமல் இடம் பிடிப்பது காலையில் கண்மாய்க்கு வந்து உடற்பயிற்சி செய்து,குளிப்பது.அந்தக் காலத்துல மில்லிக்காரரு விரா மீனு கணக்கா நீந்தி, குளிக்கறதப் பாக்கவே, வயசுபொண்ணுகளாம் தண்ணிக்கு போரேம்னு போவாளுவ என்று அம்மாச்சி சொல்லிவிட்டு ஒருமூச்சு விடும் போது அவர் குறிப்பிட்ட வயசு பொண்ணுகளில் அவரும் ஒருவரோ என சந்தேகம் எழ சிரித்துக்கொண்டே ஓடுவேன்.
ஞயிற்றுக்கிழமையானால் தாத்தா பிள்ளைகளுக்காக சீக்கிரம் வந்து விடுவார்.
ஊரிலுள்ள இளந்தாரிகள் முதல் வாண்டு வரை நீச்சலடிப்பது அவரினால் தான்.படர்ந்த மார்பின் முன்னே கைகளை நீட்டி அதில் நீச்சலடிப்பவனை கிடத்தி அவன் போக்கிலேயே நீந்தவிட்டு,பிடியைத் தளர்த்தி,கைகளை எடுத்துவிட்டு அவர் சொல்லிகொடுப்பதே ஒரு கலை போல தோன்றும். எனக்கும் அவரிடம் கற்றுக்க்கொள்ள ரெம்ப ஆசையிருந்தும் போகமாட்டேன்.
அன்றும் அப்படித்தான் எல்லாரயும் நீந்த சொல்லி,தானும் விதவிதமாய் வித்தை காட்டினார்.
அப்போது கருப்பு “பிரகாஷ் உள்ள இறங்கி வாடா" என்றான்... நான் தலையைக் குனிந்தபடியே,
இல்லேடா நான் வரல,அம்மா அடிக்கும் என்றேன். அடுத்தடுத்து தவுடன்,புல்லட்,சங்கிலி என ஒவ்வொருத்தனாக கூப்பிட இவன் நிமிர்ந்துகூட பார்க்காமல் சோப்பை எடுத்து போட ஆரம்பித்தான். அப்போது தான் சுந்தரி "ஏய் பிரகாசு, நீ என்ன பெட்டையால, நாங்கலே பயமில்லாம குதிக்கறோம்,உனக்கு என்னடா வாடா" என்னும் போது தான் மில்லி தாத்தா திரும்பினார்."யாருடா அவன், கோசல பேரனா வாடே,உங்கப்பன் இருக்கற வரைக்கும் அவனுக்கும் எனக்கும் தாம்ல நீச்சல்ல போட்டி,கோட்டிபய நல்லா கெளங்காமீனு கணக்கா நீந்துவான்,ஆனா ஒரு நா கூட எம்மகிட்ட பந்தயம் அடிக்கமுடியாதுல்ல, உங்கொப்பன் கணக்க நீ தீருடா வாடே" என கரகரகுரலில் அவ்ர் கூப்பிட்ட தொனியே என் வயிற்றில் புளிக்கரைத்தது.
எதுமே சொல்லாமல் கரையை நோக்கித் திரும்பினேன்... "என்னடா இவம் இப்டி ஒடுரான்... இவம் பேரென்ன பிரகாஷா.... சரியான பயந்தோலி பிரகாசுடா"என தாத்தா சொல்லிவிட்டு சிரிப்பதும்,தொடர்ந்து மற்றவர்கள் சிரிப்பதும் என் காதுகளில் விழும் போது நான் கரையைத் தாண்டியிருந்தேன். அன்றோடு அது முடியவில்லை... பள்ளி,கோவில்தெரு,சாவடி என எங்கு சென்றாலும் "பயந்தோலி பிரகாசு" என்பதே என் பெயரானது.அவர்கள் அப்டி கூப்பிடும் போதெல்லாம் வீட்டிற்க்குள் வந்து தேம்பி அழுவேன்..
அப்போதெல்லாம் மில்லிதாத்தா மீது தான் கோபம் வரும்.அம்மாச்சி இறந்தபிறகு ஊரைவிட்டு வந்து, நாட்கள் பல ஓடியும் பயந்தோலி பிரகாசு என்ற பேரும்,மில்லிதாத்தாவின் மீதான வெறுப்பும் மட்டும் மறையவில்லை. நன்றாக ஒரு நிலைமைக்கு வந்தபின் மில்லித்தாத்தாவிடம் சென்று, நான் ஒன்னும் பயந்தோலி இல்ல,பாத்தீங்களா என மார் தட்டி கேக்கனும்நு எனக்கு நானே சமாதானம் சொல்லிக்கொள்வேன், காலஒட்டத்தில் பத்து வருடங்களுக்கு பின் இன்று தான் என் ஊருக்கு நண்பருடன் வந்திருக்கிறேன்.
நினைவுகளில் நீந்தியவனை அமரின் குரல் "ப்ரிஷ் பஸ் ஹேட் ஸ்டாப்ட்,ஷால் வீ மூவ்?" தடுக்க யா,யா என்றவாறே பைகளை எடுத்துக்கொண்டேன்.ஊரில் எனக்கு சொந்தமென்று சொல்லிக்கொள்ளவிருந்த அத்தை வீட்டை அடைந்து, கொண்டு வந்த பொருட்களையெல்லாம் அளித்து, தடுக்க எம் அண்ணன் மவம் எப்பூடி வளர்ந்துருக்கு என கண்ணீர் வழிய,பழைய கதைகளை கேட்டு,அத்தையின் கைப்பக்குவ மீன்குழம்பினை சுவைத்து,பள்ளிப்பருவ தோழர்களைச் சந்திது அளவளாவிய போது தான் மில்லி தாத்தாவின் நினைவு வந்தது.. அருகில் அமரிடம் சிறார் பருவகதைகளை அளந்து விட்டுக்கொண்டிருந்த புல்லட் பேச்சை நிறுத்தி, மில்லிதாத்தா எங்கடா இருக்காரு? என்றேன்.
யாரடா கேக்கர? மில்லி தாத்தாவயா..இன்னும் மறக்கலியாட நீ.. எண்ணும்போதே அவன் குரல் தழுதழுத்தது.ஏன் தடுமாறி பேசுகிறான் என்று நான் யோசித்துக் கொண்டிருக்கும்போதே, தொடர்ந்தான், சொளையா நாலு பயலுகளைப் பெத்தாரு,என்ன ப்ரயொசனம் ஆத்தா போனதுமே ஆளு அரையாளா போய்ட்டாரு,ஒவ்வொரு மகனுக்கும் குடித்தனம் தனியா வந்துட்ட பொறவு, வீட்டுல மரியாதையில்லாம போச்சு, நாலாவது மவம் மட்டும் நல்லா வச்சுருப்பான்,விதிக்கொடுமைல அவனும் ஆக்ஸிடென்ட்ல குடும்பத்தோட போய்ட்டான், மருமகளுக ஆளுக்காளு தோது போட்டுக்கிட்டு அசிங்கப்படுத்த,ஊருக்குள்ள மரியாதையா இருந்த மனுசன் ரெம்ப நொந்து தோப்பு பக்கம் ஒரு குடிசைய போட்டு அங்க இருக்கறாருப்பா என்றான்.
அவன் சொல்ல சொல்ல,மனதிற்குள் இனம் புரியாத மகிழ்ச்சி பரவியது.எப்படியெல்லாம் நான் மருகியிருப்பேன்,எல்லாம் என் பாவம் தான்..என்ன ஆணவம்,என்ன அலப்பறை..இவருக்கு இது வேனும் என எண்ணியவாறே, அவர்கிட்ட கூட்டிட்டு போடா என்றேன்.வழி நெடுக பயந்தோழி பிரகாசு என்ற ஆர்ப்பரித்த அவரின் குரலும்,சிரிப்புமே நினைவில் நின்றன.
இருயா,வரேன்.. நானா பயந்தோழி நீதாம்யா தோப்புகுள்ள பதுங்கியிருக்கற பயந்தோழினு சொல்றேன்...என என் மனம் பல ஒத்திகைகளைப் பார்த்துக்கொண்டது.
நூறு தென்னைமரங்கள் சிலு சிலுவென காற்றால் வருடிவிட,தூரத்தில் ஒருவர் தென்னோலையில் முடங்கி படுத்துக் கொண்டிருந்தது தெரிந்தது.அருகே செல்ல செல்ல, அவ்வுருவத்தின் வடிவம் நன்றாகத் தெரிந்தது. கால்கள் சூம்பி,மார்புகூடு எலும்புகளின் எண்ணிக்கையை அழகாக வெளிக்காட்டி,கைகளில் ஒன்று இழுத்து இயபு நிலையிலிருந்து வளைந்து,முகத்தில் கண்கள் மட்டுமே பெரியதாக கொண்டிருந்த அம்மனிதனை மெல்ல நெருங்கிய புல்லட், தாத்தா பிரகாசு வந்துருக்கான்,வெளிநாட்டில இருந்து உங்களைப் பார்க்க என்றான். மெல்ல எழுந்து,திரும்பிய முதியவர் யாரு...ஏடெ பயந்தோலி பிரகாஷாடா.... அய்யயோ மன்னிச்சுக்கோயா, நீ எம்பூட்டு பெரிய ஆளா வந்துருக்க.எப்டியா இருக்க? என வினவியவாறே என் கைகளைத்தொட்டார்.. என் மனம் ஒருவித பேரதிர்ச்சிக்கு ஆளாகியிருப்பது என் அமைதியிலேயே புரிந்தது,இவர் தான் மில்லிதாத்தா என்பதை நம்புவதற்கே எனக்கு சில கணங்கள் பிடித்தன...யோசித்துக்கொண்டு நின்ற என்னைபார்த்தபடியே என்னயா என தீர்க்கமாக பார்த்தார்..செந்தூரம் ஏந்திய அவரின் நெற்றியை பார்த்தபடி "தாத்தா எனக்கு நீச்சல் கத்துக்குடுப்பீங்களா" என்றேன்.....தாத்தாவின் முகத்தில் வெவ்வேறு உணர்ச்சிக்கலவைகள் என்னைக் கட்டிக் கொண்டு ஓ-வென பெருங்குரலெடுத்து அழ ஆரம்பித்தார்..
அமர் நடப்பது என்னவென்றறியாமல் திகைக்க “அமர்,பலசாலிகள் பலவீனமாவதும்,பலவீனமானவங்க பலமாவதும் சூழ்நிலைகளால் தான்" அவனுக்கு புரிந்ததோ இல்லையோ,எனக்கு வாழ்வின் அர்ததம் புரிந்தது.. தாத்தாவை கட்டிக்கொண்டேன்.எனது பாலை மனது பனியானது...
வருவோம்..வருவோம்..பின்னூட்டதிற்கு நன்றி
ReplyDelete