Wednesday, March 6, 2013

ஏன் பிறந்தாய் தோழி?


ஏன் பிறந்தாய் தோழி? அழகான குடும்பம்..அளவான நட்புவட்டம்.. எழில்மிகு தோற்றம்..பன்முக திறமை மாற்றம்.. எழுச்சியுறும் எண்ணம்..மனத் திண்ணம்.. தன்னபிக்கைத் தந்த படிப்பு..பெற்றோரின் கனவினை நனவாக்கிய துடிப்பு. என எல்லாம் கொண்டிருந்தாயே..! கனவுகள் முழுமையாக பலிக்கும் முன் காலன் பறித்தவளே! உன் மரணம் வெறும் மரணமாக மட்டுமிருந்தால் இன்று இப்பதிப்பு தேவையில்லை.. வேதியியல் ஆசிரியர் திட்டி திட்டி சொல்லித் தந்தபோதும் புரியாத அமில கார வேறுபாடு உன்னால் புரிந்தது! தீபாவளிக்கு வெடித்த பட்டாசுகளின் வீரியம் காய்ந்து பண்டிகைச்சுவை போகும் முன் உன் உடலில் அமிலச்சுவையை அணுஅணுவாய் ஏற்றாய்... காதலின் பெருமை புரியா கயவனின் வெறியில் மண்ணில் கரைந்தவளே!! நேர்கொண்ட உன் பார்வை அமிலச் சாற்றில் அழிந்தது! கவிதை பாடிய உன் குரல் தீய்ந்த தீயில் குலைந்தது! கட்டான உன் உடல் கருவிஷத்தில் உடைந்தது! சிதைந்தது உன் முகமும் மாரும் மட்டுமல்ல இப்பொய்ச் சமுதாயத்தின் முகமுடியும் தான்! சாம்பலாகப் போனது உன் உடல் மட்டுமே! உன் குரலே இப்பாதகத்தின் சாட்சி! கசங்கிய பூவாய் ரத்த நாளங்களும் நசிந்து, குருதியும் குறைந்து,உணவும் மறுத்து, தூக்கம் மறந்த நீ வடித்த கண்ணீரிலும் வலி சுமந்தாய்!! நீ முனங்கிய முணகல்களிலும்,கொப்பளித்த கொப்புளங்களிலும் உன் மரண சாசனம் என்றும் அழியாவண்ணம் எழுதிவிட்டாய்.. ஒட்டு மொத்த பெண்குலத்தின் குரலானாய்... உன் மரணத்தினை தடுக்கவியலாத எங்களுக்கு உன் இறப்பினையே பாடமாக்கினாய்! ஆனாலும் சில மரணங்கள் மட்டுமே உயிரை உலுக்கும் முத்துக்குமார்களைப் போல...செங்கொடிகளைப் போல.... பாலகுமாரன்களைப் போல...... அவர்களின் வரிசையில் நீயும் உன் தடம் பதித்தாயோ? பெண்சமூக விழிப்புக்கு விதை விதைத்தாயோ? மரணத்தினை கையில் வைத்திருந்த நொடியிலும் உன் மனவலிமையினை ரசிக்க வைத்தாய்..பொட்டிலடித்தாற் போல புரிய வைத்தாய்! மரண விளிம்பில் நீ பட்ட வலி ஒவ்வொன்றும் சமூகத்திற்களித்த சாபம்........ ஆனால் உலுக்கிய உன் மரணத்தினையும் சில நாட்கள் தலைப்புச் செய்தியாக கடந்து விடும் இப்பாழான சமுதாயத்தில் ஏன் பிறந்தாயடி தோழி..பின் ஏன் இறந்தாயடி தோழி...!!!!!!!!!?!!!!

No comments:

Post a Comment