"""கூகுளில் 6,94,445 தேடல்கள்,ப்ளிக்கரில் 6600 புகைப்படங்கள்,யூடியூப்பில் 600 வீடியோக்கள்,பேஸ்புக்கில் 6,95,000 ஸ்டேடஸ்கள்,79,364 வால் போஸ்ட்கள், 510,040 கமெண்ட்கள், 1,68,000,000 மெயில்கள்,70புதிய டொமைன்கள்,ட்விட்டரில் 98,000 ட்விட்கள்,லிங்க்ட்இன்-ல் 100புது அக்கவுண்ட்கள்,ஸ்கைப்பில் 3,70,000 கால்கள்....................""""
இவையெல்லாம் என்னவென்று யோசிக்க வேண்டாம்.இணையம் என்னும் மாயவெளியில் ஒரு நொடியில் நிகழும் நிகழ்வுகளே இவை.. இப்படி நாளொரு மேனியும்,பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வரும் இணைய சமுத்திரத்தில்,கல் தோன்றி மண் தோன்றா காலத்தே தோன்றிய மூத்தக்குடியினர் நாங்கள் என்று மார்தட்டும் நம் செம்மொழி கணினி தமிழர்கள் என்னவெல்லாம் செய்கின்றனர் என்பதைப் பற்றிய ஒரு ஜாலி ஆய்வே இது...

கூகுளில் "தமிழ்" என்று டைப்பினாலே ஏதேனும் ஒரு வலைப்பதிவிற்குள் தான் செல்கின்றது,அப்படிப்பட்ட நிலையில் அவை எத்தகு தரத்துடன் இருக்க வேண்டும்,ஆனால் அதற்கான பொறுப்புகள் எதுவுமின்றி பிரபலமாக வேண்டும் என்ற ஒரே வெறியுடன் எழுதி தள்ளி வருகின்றனர்.. தமிழில் ஓரளவேனும் தீவிரமான விஷயங்களை வெளியிடும் இணையதளங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம் "ப்ளாக்குகள்" எனப்படும் வலைப்பதிவுலகம் நமக்கு மிகப்பெரும் வரப்பிரசாதம் எனலாம்.. முன்பெல்லாம் எழுத்தாளர் ஆகும் ஆசையில்,ஒரு முறையேனும் தம் பெயர் ஏதேனும் இதழில் வராதாவென,50பைசாவிற்கு போஸ்ட் கார்டு வாங்கி,தம் மனதில் பட்டதைக் கதை,கவிதை என்ற பெயரில் எழுதி,அனைத்து பத்திரிக்கைகளுக்கும் அனுப்பி,அவற்றில் எதும் பிரசுரமாகாமல் திரும்பி வந்தாலும் தளராது மீண்டும் அனுப்பி,எதுமே அச்சேறாமல் இருக்க, எப்பமாவது ஒரு முறை வாசகர் கடித பகுதியில் தம் பெயர் வந்ததே தம் வாழ்நாள் சாதனையாக ஊர் முழுதும் காட்டி மகிழும் நம்மவருக்கு, தமக்குத் தோன்றியதை எழுதும் இடமும், நினைத்ததை விமர்சிக்கும் தருணமும்,தமது சுயவிளம்பரத்தோடு வெளிபடுத்தும் அலாவுதீன் விளக்காக ""வலைப்பதிவுலகம்""" கிடைத்தது.ஆனால் தமிழ் கூறும் நல்லுலகம் இதனை பயன்படுத்தி காட்டும் அட்ராசிட்டிக்கு ஒரு எல்லை என்பதே இல்லை..
நீங்கள் பிரபல பதிவராக உங்களிடம் ஒரு இணைய வசதியுடன் கூடிய கணினியும்,கொஞ்சம் ஜனரஞ்சகமாக எழுதவும்,மொக்கை போடவும் தெரிந்தாலே போதும்.இதில் பிரபல பதிவர், நம்பர் 1 பதிவர் என்று தமக்கு தாமே பட்டங்கள் வேறு.. இலங்கைப் பிரச்சனையினைப் பற்றிய ஒரு கட்டுரையும்,தமிழக மீனவர்கள் பற்றிய ஒரு கட்டுரை ஆய்வினையும் எங்காவது படித்து தொலைந்து,அதை பற்றி அரைகுறையாக பதிவிட்டால் அவர்தான் "சமூக பதிவர்".. "அமுங்கி போன அன்னா ஹசாரே,ஆர்ப்பரிக்கும் அரவிந்த் கெஜ்ரிவால், ஆளப் போவது யார்?", அழகிரியின் அடுத்த அதிரடியும் கனிமொழியின் கலங்களும்","2016 இல் பா.ம.கா இருக்குமா?" என்று போகிற போக்கில் தலைப்புகளில் தாழித்து விட்டு பத்திரிக்கைச் செய்திகளை கலந்து கட்டி அடித்து விட்டால் அவர்தான் "அரசியல் பதிவர்"... பர்மா பஜாரில் கிடைக்கும் உலகப்பட டிவிடிக்களை சப் டைட்டிலோடு வாங்கிட்டு வந்து,ஞாயிற்றுக்கிழமை மதிய வேளையில் தூக்கம் வர வேண்டுமென்பதற்காக அதைப் போட்டுப் பார்த்துவிட்டு,பாதியிலேயே தூங்கிவிட்டு,பின் அதனைப் பற்றி விமர்சிக்கின்றேன் என்னும் பெயரில் விக்கிபீடியாவில் கதையை முழுவதும் படித்து,அங்கிருந்து கொஞ்சம் இங்கிருந்து கொஞ்சம் என காப்பி பேஸ்ட் செய்து,உலக சினிமா,பார்க்க வேண்டிய படம்,தமிழ் ல எடுக்கரதெல்லாம் படமா?னு ஒரு கேள்வியைக் கேட்டு, எந்த படம் மக்களால் அதிகம எதிர்பார்க்கப்படுதோ அது எந்த இங்க்லீஷ் படத்தோட அப்பட்டமான காப்பின்னு,4 ஸ்டில்ஸ் ஒட போட்டு,காப்பி டைரக்டர்ஸ்னு ஒரு லிஸ்ட் போட்டு எல்லாரயும் அடிச்சு,துவைச்சு, லாஜிக் இல்லை,மேக்கிங் இல்ல,லைட்டிங் போகஸிங் இல்ல, என எக்ஸ்ட்ரா பிட்டுகளைப் போட்டு கலந்து கட்டி எழுதினா அவர் சினிமா பதிவர்.

. நாலு வரியில ஒரு உரைநடைய எழுதிட்டு,கொஞ்சம் புரியாத வார்த்தையப் போட்டு தாளிச்சு கவிதைன்னு எழுதினா அவர் கவிதை பதிவர், இது தவிர ஜோக்குன்ற பேருல கோபம் வர மாதிரி காமெடி பண்ற காமெடி பதிவர்கள்,பெண்களுக்காக மட்டுமே ஆண்கள் ப்ராகிபிட்டெட் என்று ஆவக்காய் ஊறுகாய் அவியாமல் போடுவது எப்படி,ஆமை முட்டை சாப்பிட்டால் பெண்களுக்கு ஆஸ்த்துமா வராதா?,எந்த சீரியலில் மாமியார் நல்லவர்? என்று கொலையாய் கொல்லும் பெண்ணிய பதிவர்கள், சிறுகதை என்னும் பெயரில் ஆரம்பித்து முடியாத தொடர்கதையாய் நீளும் கதைகளை மட்டுமே எழுதும் கதைப் பதிவர்கள், 12ராசிகளுக்கும் பங்குனி மாத பலன்கள்,வைரக்கல் மோதிர வாங்கலாமா?,வாஸ்த்து, யோக பலன்,கோவில் பரிகாரங்கள் என ஜல்லியடிக்கும் ஜோசிய பதிவர்கள், இன்னா நடந்தா இன்ன நைனா நான் மொக்க மட்டும் தான் போடுவேன்னு மண்டை காய வைக்கும் மொக்கை பதிவர்கள், ராம் என்று பெயரை வைத்துக் கொண்டு,இந்தியாவைப் பற்றி பேசினால் கூட இவன் இந்துத்வாவாதி,பார்பனியன் என்றும், கமெண்ட்டுகளைப் போட்டும்,மதம் சார்ந்த பதிவிடும் மதவாதி பதிவர், இப்படி பலதரப்பட்ட வகைகளில் இருக்கும் பதிவர்களைக் கிண்டலடிப்பதையே தொழிலாக கொண்டு,பிரபல பதிவர்கள் எனப்படுபவர்களை "ஸ்பூப்" செய்யும் ஸ்பூப் பதிவர்கள், இவர்கள் எல்லாவற்றிற்கும் மேலாக அனைத்து பதிவுகளிலும் போய் கமெண்ட் போடுவதை,எதிர்வினை மட்டுமே செய்யும் "கமெண்ட் பதிவர்கள்"..மற்றும் பெயரே இல்லாமல் உலவும் அனானிகள் என இவர்களின் பட்டியல் நீள்கின்றது..
ஆரம்ப கட்ட காமெடியே இவர்களின் ப்ளாக்குகளின் தலைப்புகளில் தான் தொடங்குகின்றது,தலைப்பு ஒன்னு சும்மா பார்க்கும் போதே பத்திக்கர மாதிரி(எகா:பாட்டாசு பாலு,தீவெட்டி தீரன், கற்பூர கண்ணா) இருக்கனும்இல்ல பார்க்கும்போதே ஜிவ்வுனு கவர்ந்து இழுக்கர மாதிரி(எகா: காந்தகண்ணழகி காந்தா, சொக்க வைக்கும் சொர்னாக்கா)இருக்கனும்அதுவும் இல்லேனா பார்க்கும் போதெ குப்புனு சிரிப்பு வர மாதிரி(எகா:ஆத்தா நான் பாஸ் ஆயிட்டேன், வாவ் சட்டை மேலே எவலோ பட்டன்ஸ்)இருக்கனும்இதே மாதிரி தான் பதிவுகளுக்கு தலைப்பு வைக்கும் போதும் கவரனும்.
பின்ன படிக்கற நாலு பேருக்கு நாற்பது பேரு எழுதினா அவங்கள மசாலா போட்டு இழுத்தா தானே முடியும்..அப்ப தானே ஹிட்ஸ் விழும்,ரேங்கிங் நம்பர் ஒன் ஆகலாம்.பிரபல பதிவர் ஆகனும்னா இங்க ரெம்ப ஈஸி,இருக்கரதுல யாரோடது நம்பர் ஒன்ல இருக்கோ அங்க போய் அவங்க போடற பதிவுக்கெல்லாம் எதிர்த்து கமெண்ட் பண்ணனும். அந்த பிரபல பதிவரோட பதிவுகளைப் படிக்க வரவங்க இவரையே எதிர்த்துட்டானே யாருடா இவன்னு ப்ரொபைல பார்த்து அந்த ப்ளாக்கு போவாங்க..அப்பறமென்ன பேஜ் ஹிட்ஸ் கிடைக்கும்.வாரத்தில எப்டியும் 20பதிவு போட்றனும்,அதில 4சினிமா விமர்சனம்,2எங்கயாவது ஓசியா சாப்பிட்ட சாப்பாட்ட பற்றி,3 நம்மளப் பத்தின சுயவிளம்பரம்,2தமிழ்நாட்டில நிலவற மின்வெட்டு பத்தி,2கதை,கவிதை,3பயணத்தொடர்களைப் பற்றி,2சின்னத்திரை பதிவு,3 நடப்பில ஹாட்டா இருக்கற பற்றிய கருத்துக்கள்,2 கில்மா மேட்டர்ஸ்,2காப்பி பேஸ்ட்.... இது போதும்...அப்பறமென்ன ஆட்ப்ளை,ஆட்சென்ஸ்,மத்த விளம்பரங்களை போட்டு காசும் பார்களாம்.

உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அப்பா இப்பவே கண்ண கட்டுதே போதும் டா சாமின்னு பேஸ்புக் பக்கம் நுழைந்தா அங்க அதுக்கும் மேல.
நாலாங்க்ளாஸ் படிக்காதவன் லாம் நாசா ல வேலை பாக்கறேன்னு ப்ரொபைல் வைச்சுகிட்டு,எங்கயாவது ஆத்துமேட்டு பக்கம் போய் மரத்தடில நின்னு போட்டோ எடுத்துட்டு "இட்ஸ் மை கூல் ஸ்னாப் அட் மை ட்ரெக்கிங்"னு குடுக்கற அலம்பல பாக்காம எஸகேப் ஆகிடலாம்டான்னு ஒடினாலும்,tag ஆப்சன்ல நம்மல கோர்த்து விட்டு மரண பயத்த காட்டிருவாய்ங்க, அதில இருந்து தப்பிச்சா "அகில உலக அப்பாடக்கர் தலைவர் பாசறை" ல ஆரம்பிச்சு " நடிப்பு வராத நடிகரை நாயை விட்டு ஒழிப்போர் சஙகம்" வரைக்கும் க்ரூப் ஆரம்பிச்சு நம்மள நாசூக்கா சேர்க்க ஒரு கூட்டம், மின்வெட்டுக்கு மாற்று எரிபொருளா ஆமணக்கிலிருந்து பவர் எடுக்கலாம்னு அறிவாளியா ஒருத்தன் ஸ்டேடஸ் போட்டா அதற்கு ஏண்டா மொக்கை போடற?அன்லைக் பட்டன் இல்லையா மச்சினு கமெண்ட் பண்ணீட்டு,மாற்றான்ல காஜல் அகர்வால்க்கு கண்ணழகா?கன்னமழகா?னு ஸ்டேடஸ் போட்டா ஒரு பத்தியே கமெண்ட் பண்ற ஒரு கூட்டம்,தினமும் கண்ணில தண்ணி வரவைக்கற ஒரு போட்டோவை போட்டோஷாப்ல எடிட் பண்ணி எப்பூடின்னு கேக்கற ஒரு கூட்டம், கருத்து சொல்றேன்னு சமுதாயத்தை சாக்கடைன்னு ஆரம்பிச்சு 10வரியில அலற வைக்கற ஒரு கூட்டம், இன்னைக்கு முதல் தடவயா தோசை சுட்டேன்,முதல் தடவையா கண்மை இல்லாம காலேஜ்க்கு போனேன்னு சீன் கிரியேட் பண்ற பெண்கள் கூட்டம், காதலியால் கைவிடபட்டவர்கள் கவனத்திற்க்கு என்று காதல் தோல்வி பீலிங்ஸ்-யை அடிடா அவளன்னு போஸ்ட் போட்டு படுத்தும் மாடர்ன் தேவதாஸ்கள் ஒரு பக்கம், ரிலீஸ் ஆகும் தேதியன்று மார்னிங் ஷோவில் போய் படத்தைப் பார்த்து தொலைந்து விட்டு,படம் பர்ஸ்ட் சீனில் ஹீரோ என்ட்ரியில் ஆரம்பித்து கிளைமாக்ஸ் டைட்டில் கார்டு ஒடும் வரை வரிக்கு வரி ஸ்டேடஸ் தட்டிவிட்டு,முடிவாக படம் மொக்க யாரும் போய்டாதீங்க என்று தயாரிப்பாளரின் தலையில் முதல் நாளே துண்டினை போடும் கூட்டம் ஒரு பக்கம், இன்டர்னல் எக்ஸாம்ல எதுக்குமே ஆன்ஸர் தெரியலேனா இந்த ரியாக்ஸன்,அப்பா அசிங்கமா திட்டும் போது இந்த ரியாக்ஸன் என்று வடிவேலு,சந்தானம் வகையறாக்களின் காமெடி எக்ஸ்பிரசன்களை கலந்து கட்டி ஷோவாக்கும் ஒரு கூட்டம்,இப்படி எக்கசக்க அலப்பறைஸ்..இப்படி, சினிமா அரட்டைகள், கிசுகிசுக்கள், வம்புச்சண்டைகள்,பேன்பேஜ்கள்,ஈவென்ட்கள்,க்ரூப்கள்,லைக்குகள்,ஷேர்கள்,கமெண்ட்கள் என மானாவாரியாக கொட்டிகிடக்கின்றன இந்த பேஸ்புக் சுவற்றில்.ஆக பேஸ்புக்கில் இந்த எதிர்கால தமிழ் சமுதாயத்திடம் அடிபடுவது பவர்ஸ்டாரும்,சாம் ஆண்டெர்ஸனும்,மதுரை ஆதீனமும், நித்தியானந்தாவும் மட்டுமே அல்ல நம் தமிழும்,பண்பாடும் தான் என நொந்து கொண்டே ட்விட்டெர் பக்கம் பார்வை வீசினால்,

அங்கு அதற்கு மேல், விகடன் வலைபாயுதேவில் வர வேண்டும் என்பத்ற்காகவே எழுதும் சிலர்,பாத்ரூம் போனால் கூட அதை ட்வீட்டும் பலர்,"சப்பாத்தினா லேசா இருக்கும்,பூரின்னா உப்பியிருக்கும்###அவதானிப்பு" என்று போகிற போக்கில் உலகமகா தத்துவத்தினை போடும் இறுமாப்பு,அதனையும் ரிட்வீட் செய்யும் பாலோயர்கள், நடிச்சா ஹீரோ தான் என்ற வசனங்கள்,உப்பு பெறாத சண்டைகள், உதவாத வாதங்கள்,சர்ச்சைகள் என புது உலகில் பயணித்துக் கொண்டுள்ளனர். முடியல என்று வீடியோ சைட்டுகளான யூடியூப் பக்கம் சென்றால், பல்லில் படுமாறு ப்ரஷ் செய்வது எப்படி, பிகரிடம் அடி வாங்காமல் சைட் அடிப்பது எப்படி என்பது போன்ற ஹெள ட்டூ ட்டு? வகை விடியோக்களும்,4க்கு 4 ரூமிற்குள் எடுக்கப்பட்டு தமிழின் சிறந்த திகில் குறும்படம் என்ற வகை விடியோக்களும், கொலவெறி ஸ்டைலில் ரெகார்டிங் ரூமில் வேண்டுமென்றே எடுக்கப்பட்ட இயல்பான வகை விடியோக்களும், காப்பி இசையமைப்பாளார்கள்,இயக்குனர்கள் என காப்பியவதிகளை கலங்கடிக்கும் வகை விடியோக்களும், டீவியில் பார்ப்பது போதாது என்று சீரியல்,டீவி நிகழ்ச்சிக்கள் வகை விடியோக்களும் நிமிடத்திற்கொரு முறை அப்லோட் செய்யப்படுகின்றன...

இவை மட்டும் தான் இணையமா என்ற ஆயாசையில் தேடினால் பல நல்ல தளங்களும்,ஆழமான கருத்துக்களை முன்வைக்கும் வாதங்களும் நிகழும் தளங்களும், தொல்காப்பியம் முதல் ரமனிசந்திரன் நாவல் வரை மின் நூல்களாக வழங்கும் தளங்களும்,கல்வி ஆலோசனை,வேலைவாய்ப்பு தகவல்களைப் பகிரும் அருமையான தளங்களும் இன்னும் பல சுவையான அறிவார்ந்த பொழுதுபோக்கும் தளங்களும் இருக்கத்தான் செய்கின்றன இருக்கத்தான் செய்கின்றன..ஆனால் படிக்க யாருமின்றி ஈ ஓட்டிக்கொண்டு...மொத்ததில் இந்த இணைய பூதம் நம் இளைய சக்திகளின் நேரத்தினை மட்டுமே விழுங்கி கொண்டிருக்கின்றது என்றால் மிகையல்ல..
தொடர்புடைய பதிவுகள்
Nice one di!!!
ReplyDelete