
எண்டோசல்ஃபான் எனும் எம தூதன்.. எதிர்ப்புக் காட்டும் உலகம்...வக்காலத்து வாங்கும் இந்தியா..!
''விவசாயப் பயிர்களுக்கான பூச்சிக்கொல்லி என்ற பெயரில் தெளிக்கப்படும் 'எண்டோசல்ஃபான்', மிக வீரியம் மிக்க விஷமாக இருக்கிறது. இது மனித இனத்துக்கே, பெரும்கேடாக முடியப்போகிறது'' என்று பல ஆண்டுகளாகவே மருத்துவர்களும், சூழல் ஆர்வலர்களும் எச்சரித்துக் கொண்டே இருக்கிறார்கள். இதன் பாதிப்பு எப்படி இருக்கும், என்பதற்கு சாட்சியாக கேரள மாநிலம், காசர்கோடு மாவட்டத்தில் நடைப்பிணங்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் மக்கள்.இதன் பிறகும்கூட, 'எண்டோசல்ஃபான் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதற்கு ஆதாரம் வேண்டும்' என்று சொன்னபடி... அந்தப் பூச்சிக்கொல்லி பயன்பாட்டுக்கு தடைவிதிக்க மறுத்து வருகிறது, இந்திய அரசு.அது மட்டுமா... சமீபத்தில், சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ஜெனீவா நகரில் உலக நாடுகள் ஒன்றுகூடி, 'உலக அளவில் எண்டோசல்ஃபானுக்கு தடை விதிக்கப்படும்' என்று முடிவெடுக்க... அந்தக் கூட்டத்திலும்கூட, 'இந்தியா போன்ற வளரும் நாடுகளில் எண்டோசல்ஃபானுக்குத் தடை விதிக்க முடியாது. அதற்கு இணையாக இன்னொரு விஷத்தைக் கண்டுபிடித்து எங்கள் கையில் கொடுத்துவிட்டு தடை செய்யுங்கள்' என்று கோரிக்கை வைத்திருக்கிறது இந்தியா! எங்கே போய் முட்டிக் கொள்வது நாம்?
ஆளையே காவு வாங்கிவிடும் 'எண்டோசல்ஃபான்' பூச்சிக்கொல்லிக்கு எதிராகச் சுழன்று கொண்டிருக்கும் தன்னார்வலர்களில் முக்கியமானவர்... கேரளாவைச் சேர்ந்த 'தணல்' எனும் அமைப்பைச் சேர்ந்த ஸ்ரீதர். அவர் இதைப்பற்றி நம்மிடம் பேசியபோது, 'எண்டோசல்ஃபானை, 'பலரும் பூச்சிமருந்து'னு சொல்றாங்க. அது தப்பு... விஷம்னுதான் சொல்லணும். 'இரண்டாம் நிலை விஷப்பொருள்’னு உலகச் சுகாதார நிறுவனமும், 'முதல் நிலையில், இரண்டாம் பிரிவை சேர்ந்த நச்சுத்தன்மையுடைய பூச்சிக்கொல்லி’னு அமெரிக்கச் சுற்றுச்சூழல் கழகமும் எண்டோசல்ஃபானை அறிவிச்சிருக்கு.இத்தகைய நச்சுப்பொருளைத்தான், உணவுப் பொருள் உற்பத்தியில அளவுக்கு அதிகமா நாம பயன்படுத்துறோம். இதன் நச்சுத்தன்மை மனுஷங்களோட உடம்புல சுலபமா நுழைஞ்சிரும். மூச்சுக்குழாய் வழியா மட்டுமில்ல... தோல்ல இருக்கற நுண் துளைகள் வழியாகூட நுழையக்கூடிய சக்தி அதுக்கு உண்டு. நுரையீரல், வயிறுனு வசதியா அது இடம் புடிச்சுட்டா... சாமான்யமா அசையாது. மத்த நச்சுகள், மலத்தோட வெளியேறுற மாதிரி, இது வெளியேறாது. உடம்புலயே தங்கி, 'ஸ்லோ-பாய்சன்’ மாதிரி செயல்பட்டு ஆளையே காவு வாங்கிடும்.பயிர்கள்ல தெளிக்கப்படுற இந்த விஷம், காத்து மூலமா தண்ணியிலயும் கலந்திருது. அதை குடிக்கற கால்நடைகளின் ரத்தம் வழியா இறைச்சியில கலந்து, அதைச் சாப்பிடுற மனுசஷங்களோட ரத்தத்துலயும் கலந்து பல நோய்களை ஏற்படுத்துது. எண்டோசல்ஃபான் உள்ளிட்ட ரசாயனப் பூச்சிக்கொல்லிகளைத் தொடர்ந்து பயன்படுத்தினால், உயிருக்கும் சூழலுக்கும் மிகப்பெரிய அபாயம் ஏற்படுறதைத் தடுக்கவே முடியாது.
அமெரிக்கர்கள் மட்டும்தான் மனிதர்களா? பூச்சிக்கொல்லிகளோட தன்மை, அதனால ஏற்படுற பிரச்னைகள் இதையெல்லாம் தெரிஞ்சுகிட்டு, அவை பத்தின உண்மை நிலையை அரசுக்கு அறிக்கையா கொடுக்கறதோட, தடை செய்யப்பட வேண்டிய அவசியத்தையும் எடுத்து வைக்கறதுக்காக 'மத்தியப் பூச்சிக் கட்டுப்பாட்டுக் கழகம்' இயங்கிக்கிட்டிருக்கு. ஆனா, இந்த அமைப்பு தனியார் முதலாளிகளோட கட்டுப்பாட்டுலதான் முழுக்க இயங்கிக்கிட்டிருக்கு.கேரளாவோட காசர்கோட்டுல நடந்த விபரீதங்கள் (பார்க்க, பெட்டிச் செய்தி) கண்முன் சாட்சிகளா இருக்கு. அதை அடிப்படையா வெச்சே எண்டோசல்ஃபானைத் தடை செய்யலாம். பெரும்பாலான உலக நாடுகள் தடை விதிச்ச பிறகும், நம்ம அரசு அசையாம இருக்கு. 1952-ம் வருஷமே அமெரிக்காவுல டி.டி.டி ரசாயன மருந்தைத் தடை பண்ணிட்டாங்க. ஆனா, 50 வருஷம் கழிச்சு, 2002-ம் வருஷம்தான் இந்தியாவுல அதைத் தடை பண்ணியிருக்காங்க. ஒரு நாட்டுல வாழற மக்களுக்கு ஆபத்து ஏற்படுத்துற ரசாயனம், அடுத்த நாட்டுல இருக்கற மக்களை வாழவா வைக்கும்? இந்த அடிப்படை அறிவுகூடவா நம்ம அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் இருக்காது? இல்ல... அமெரிக்காவுல இருக்கறவங்கதான் வாழத் தகுதியான மனுஷங்க... இந்தியா மாதிரியான நாடுகள்ல இருக்கறவங்க வாழத் தகுதியில்லாத இழிபிறவிங்களா?'' என்று கொதிப்புடன் கேட்ட ஸ்ரீதர்,
''போபால் விஷ வாயுக் கசிவு மாதிரியான மிகமோசமான விளைவுகள் ஏற்படுறதுக்குள்ள எண்டோசல்ஃபானை அரசு உடனடியா தடை செய்யணும்' என்று தங்களின் கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தினார்!
நாசமாகும் நரம்பு மண்டலம்!
தமிழகத்தில் எண்டோசல்ஃபான் தொடர்பாக விவசாயிகளுக்கு விழிப்பு உணர்வை ஏற்படுத்தி வரும் திண்டுக்கல்லைச் சேர்ந்த 'செரின்' அமைப்பின் நிர்வாகி ஜேம்ஸ் விக்டர், ''தமிழகத்தில், எண்டோசல்ஃபான் பாதிப்பு பற்றி சரியான ஆவணங்கள் இல்லை. அதனால், என்ன மாதிரியான பாதிப்புகள் என்பது குறித்து இங்கே யாருக்கும் தெரியவில்லை. அதேசமயம்... இதுதான் என்று தெரியாமலேயே பலவகையான பாதிப்புகள் பரவலாக நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. விவசாயிகளுக்கு அதை தெரிவிக்க, நாம் தவறி விட்டோம்.இந்தப் பூச்சிக்கொல்லியைத் தொடர்ந்து பயன்படுத்துபவர்களுக்கு உடல் மற்றும் மன ரீதியான பாதிப்பு ஏற்படுவதோடு, நிலத்தில் உள்ள நன்மை செய்யும் பூச்சிகளும் அழிந்து விடுகின்றன. இதனால் பல்லுயிர் பெருக்கம் பாதிக்கப்பட்டு, உயிர்ச்சூழல் மிகப்பெரிய அபாயத்தை சந்தித்துக் கொண்டிருக்கிறது. எண்டோசல்ஃபானின் நச்சுத் தன்மை, மனிதர்களின் மத்திய நரம்பு மண்டலத்தைத் தாக்கிச் செயலிழக்கச் செய்கிறது. இதை அதிகமாக நுகரும்போது தலைவலி, மயக்கம், சோர்வு, மனஅழுத்தம் ஏற்படுகிறது. அளவு கூடும்போது, கடும் விஷமாக மாறி, உயிருக்கே உலையாகிவிடும். புரோட்டின் குறைவாக உள்ளவர்களை இதன் நச்சு எளிதாக தாக்கும். இதனால் தோலில் வெடிப்புகள், புற்றுநோய், மலட்டுத்தன்மை போன்ற தொடர் பாதிப்புகளும் ஏற்படும்.
எண்டோசல்ஃபான் தெளித்த வயல்வெளிகளில் மேயும் ஆடு, மாடு போன்ற கால்நடைகளின் சிறுநீரகங்கள், கல்லீரல், விந்துப் பைகள் செயலிழந்து, நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்து, கண்பார்வை இழப்பும் ஏற்படுகின்றன. பயிர்களில் தெளிக்கப்படும்போது நீரிலும், பழம் மற்றும் காய்கறிகளிலும் ஏழு நாட்கள் வரை இதன் வீரியத் தன்மை இருக்கும். அதேசமயம், மண் துகள்களில் அவை படிந்து 60 முதல் 800 நாட்கள் வரை வீரியம் குறையாமல் இருக்கும். எனவே, உணவுப் பயிர்களில் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துவது தவிர்க்கப்பட வேண்டும். எண்டோசல்பானைத் தடை செய்ய இந்தியா உடனடியாக முன்வரவேண்டும்'' என்று வலியுறுத்தினார்.
கல்யாணமா... கருமாதியா... என்பதை இனியாவது அரசு முடிவு செய்தால் நல்லது!.
நன்றி - பசுமை விகடன்
No comments:
Post a Comment